Monday, February 15, 2010

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...

( என் பொறியியல் கல்லூரித் (சி ஐ டி 1984) தோழரும் தற்போது துபாயில் இருக்கும் அருமை நண்பர் லிவிங்க்ஸ்டன் அகஸ்டின் அவர்கள் அனுப்பிய கவிதை...

படியுங்கள்... உங்கள் இதயத்தையும் நெருடும்.)

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!

சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து
முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து
உனக்காக காத்திருக்கும்பொழுது
காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு..
ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!

சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல...
மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!

பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும்
சின்னப்பையனைபோல...
மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!

அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...
பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !

கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது
குளிரடிப்பதாய் கூறி –
ஒரு குழந்தையை போல அழுகிறாய் !

மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்...
கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "

இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்...
என் துபாய் கணவா!

கணவா... - எல்லாமே கனவா.......?
கணவனோடு இரண்டு மாதம்...
கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?

ٌ 12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ...
5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ....
2 வருடமொருமுறை கணவன் ...
நீளும் பட்டியலோடு
நீயும் இணைந்துகொண்டாய்!
இது வரமா ..? சாபமா..?

அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்...
முகம் பூசுவோர் உண்டோ ?
கண்களின் அழுகையை...
கண்ணாடி தடுக்குமா கணவா?

நான் தாகத்தில் நிற்கிறேன் –
நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் –
நீ விசாவை காட்டுகிறாய்

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
விட்டுகொடுத்து... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய் நான் விழித்து...
எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு...
தூங்குவதாய் உன் நடிப்பு...
வாரவிடுமுறையில் பிரியாணி...
காசில்லா நேரத்தில் பட்டினி...
இப்படி காமம் மட்டுமன்றி
எல்லா உணர்ச்சிகளையும்
நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்

இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம்
உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!
தவணைமுறையில் வாழ்வதற்கு
வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?

எப்பொழுதாவது வருவதற்கு
நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
விரைவுத்தபாலில் காசோலை வரும்
காதல் வருமா ?
பணத்தை தரும்... பாரத வங்கி !
பாசம் தருமா?

நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு
ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்
விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ
என் இதயத்தை?

பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ
தங்கம் தேடி துபாய் சென்றாயே?
பாலையில் நீ
வறண்டது என் வாழ்வு!

வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல்
ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த
புகைப்படம் அனுப்புகிறாய்!

உன் துபாய் தேடுதலில்...
தொலைந்து போனது –
என் வாழ்க்கையல்லவா..?

விழித்துவிடு கணவா! விழித்து விடு –
அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!

விசாரித்து விட்டு போகாதே கணவா
விசா ரத்து செய்துவிட்டு வா!

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்

5 comments:

  1. அய்யா த.நெ. அவர்களே,
    கவிஞர்கள் 1. இதயத்திலிருந்து எழுதக்கூடும். 2.மூளையயை(இருந்தால்)கசக்கி எ.கூ. ஆனால் அகஸ்டின், இதயத்தையே கவிதையாய் இறக்கி வைத்துவிட்டார். கவிதை அவர் அகத்துள் வாழ்வதால், அவர்-லிவிங்க் கவிதை ஆகிறார். என் வலியை, உணர்வை என்னால் உணர்ந்து எழுத முடியலாம். ஆனால் மற்றவரின் உணர்வுகளை படம் பிடிப்பது என்பது.... படைத்தவன் அவர்க்கு அளித்த வரம். எல்லா நிகழ்வுக்ளையும், இத்தனை நுணுக்கமாயும், இயல்பாய் யாரும் எழுத முடியுமா? எழுதி இருக்கிறார்களா? விடயம் தெரிந்தவர்கள் எழுதுங்கள். நான் மின் மடலில் இக்கவிதை பார்த்து
    சொன்னதை மறுபடியும் சொல்கிறேன்.
    "எனக்கு காம்ப்ளெக்ஸ் ஏற்படுகிறது." கவிதை என்ன என்று புரிகிறது. என்னெ வுடுங்க சாமி! நான் கழன்டுக்கறன்.
    இப்போதைக்கு, நண்பரின் சங்கடம் தீர பிரார்த்தனை தவிர வேறொன்றும் அறியேன்.
    இருவரும் நன்றாய் வாழ்ந்து, இறவாக் கவிதைகள் படைக்க இறைவன் அருளட்டும்..ஆமென்..

    காம்ப்ளெக்ஸ் கார்மான்

    ReplyDelete
  2. ஐயா! நண்பரின் மனைவிக்குச்சொல்லுங்கள்.அவரது இதயத்தை அவரது கணவர் எடுத்துச்சென்றது மட்டுமின்றி,அவரது இதயத்தோடும் வைத்திருக்கிறார் என்று.இல்லாவிட்டால் அந்தப்பெண் இதயத்தின் துடிப்பை இப்படிக்கொட்ட முடியுமா? அவர் கொட்டிவிட்டார்.அள்ளிய எனக்குத்தான் கனம் தாங்கவில்லை.

    ReplyDelete
  3. திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா. என்னும் கவிதையில் ஒரு இளம் பெண்ணின் புலம்பலை அழகாக வெளிபடுத்திய புலமையை எடுத்துரைக்க வார்த்தைஇல்லை.கவிதை நன்று[அல்ல}கவிதைஅன்று காவியம் .கவியத்தை படித்து அகம் மகிழ்ந்தேன் .தேன் படைத்த சார்க்கு [tnk] நன்றி.நாச்சாரவி

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. nalla Kavidhai. oru pennin ullathil irundu olugia kavidai. panam! Panam!! adarkaga Vallkai tholaitha kadai.

    Irainjum pennitku en Parivugal.

    Ravibhai
    knkravindran@gmail.com

    ReplyDelete