Tuesday, December 28, 2010

நீயே பொக்கிஷம்

அந்தமான் தீவுகளுக்கு பொங்கல் விழா சிறப்பு விருந்தினராக வந்திருந்த திரைப்பட இயக்குனரும் நடிகருமான திரு சேரன் அவர்களுக்கு நகைச்சுவைக் கவிஞர் கார்மான் வாசித்தளித்த கவிதை.

நீயே பொக்கிஷம்

செழுமைச் சேராவே!

சேராவைச் சேர்ந்திருக்கும்

(ச)சோதரியே!

வணக்கம்!

வாண்டுகளே,

உங்களுக்கும்தான்.

அழகனே,

தாகம் தணிய

நடிக்க வந்தாய்…

வாய்ப்புகள்

வாய்தா வாங்க

வந்து சேர்ந்தாய்

இயக்க…

யாரும் கிடைக்காமால்

நீயே இட்டாய்

ஆட்டோகிராஃப்.

எங்களின்

இதயப்புத்தகத்தில்

எப்போதும் உன்

ஃபோட்டோகிராஃப்.

(என் மனையாள் முன்மொழிந்தது) எனக்குத் தெரிந்து

எங்களூர் அரங்குகளில்

காலணிகளை கழற்றி

குத்துவிளக்கேற்றிய

குலக்கொழுந்து நீ!

திரையில் மட்டுமே

நடிப்பவனே,

அலங்கார நாற்காலிகள்-

அலர்ஜியோ உனக்கு

எங்கு சென்றாலும்

அப்புறப்படுத்துகிறாய்

அவைகளை!

இளமையின் இரகசியம்

இடுவதையெலாம்

உண்பதில் இல்லை

என்றாய்.

நிம்மதியாய் வாழ்ந்தால்

எப்போதும்

இளமைத் தோற்றம்

நிலைத்திருக்கும்

என்றாய்.

காசுக்காய்,

எல்லோரும்

திரையில் கதை

பண்ணகாலத்தில்

மனசுக்காய்

க(வி)தை சொன்ன

மகாக்கவிஞன்,

மாமனிதன் நீ!

கற்றோர்க்கு

சென்ற இடமெல்லாம்

சிறப்பு.

நீ

கல்லாதவன் ஆயினும்

கிடைக்கப்பெற்றாய்…

காரணம்-

கற்பித்தாய்,

வாழ்க்கையை,

வாழும் முறையை

முறையாய்

நீ

கற்பித்தாய்

உன் படங்களால்.

பாடங்கள்

எமக்கவை!

பூவின் அதரம்

தொட்டுப் பேசும்

தென்றலாய்

உன் படங்களின்

உறவுகள் பேசுகின்றன.

உன்

திரைச்சித்திரங்களால்

எங்கோ

மூலையில்

இதயத்திலிருக்கும்

நெகிழ்ச்சி

முடிச்சினை

சுண்டிவிடுகிறாய்.

காதலியின்

கடிதம் கண்டு

கரையும் கண்களை

திரையில்

முதன்முதல்

பார்க்கையில்

கலைத்தாய்க்கு

நீ-

பிள்ளையாய்

பிறந்திருப்பது

புலப்படுகிறது.

உன்

இன்னொரு முகமும்

ஒலிவாங்கியை

நீ

பிடிக்கையில் தெரிந்தது.

அமைதியின்

ஆழம் பதிந்த

உன் கண்களின்

ரௌத்திரம்

அப்போது புரிந்தது…

அப்பப்பா…

ஜாலக்காரன் நீ.

உன் பேச்சிலோ-

எளிமையின் எளிமை

இறுதிவரை கண்டேன்.

கனவு காணச்

சொன்னாய்..

இலட்சியம்

கொள்ளச் சொன்னாய்…

இரண்டிற்குமாய்

எப்போதும் எப்போதும்

உழைக்கச் சொன்னாய்.

இலக்கை

அடையும்வரை

உழை, உழை,

பிழையிலாமால்

பிழையென்றாய்.

செய்யும் தொழிலை

செம்மையாய்

செய்யுங்கள்,

சில்லரைகள்

வாங்குவதை

விட்டொழியுங்கள்

என்றாய்.

சந்ததியற்கு

தாய்மொழி

தரச் சொன்னாய்.

தத்தம் மனைவியை

நிறைவாய்

நேசிக்கச் சொன்னாய்.

அப்பன் ஆத்தாளை,

சொந்தங்களை,

பந்தங்களை

களையாதிருங்கள்

என்றாய்.

காசு பணம்

வந்தால்

கட்டு வீட்டை,

சொந்த மண்ணில்…

சொத்து வைத்தாலும்

அப்பன் ஆத்தா

ஊரில் வை…

சொல்லிவைத்தாய்

மதுரைமண்ணின்

மகனே!

எங்கும் போ..

எதுவும் செய்..

இறுதியில்-

இளைப்பாற நேரமாயின்,

சொந்தக்கூட்டிற்கு-

உன் சொந்தமெலாம்

குவிந்திருக்கும்

அந்த

சொர்க்கக்கூட்டிற்கு

தப்பாமல் வந்துவிடு

இழந்ததையெலாம்

இனியும் பெற்றிடலாம்

என்றாய்.

திரைவியாபாரத்

திமிலங்கள்

திருடிவிட்ட

தமிழ்ச்சினிமாவை

திருப்பித்தர-

சேரா,

நீ செய்வாயா

ஒரு யாகம்…??

தவமாய்த் தவமிருந்து

பெற்றவைகளை

மீட்டுத் தா

அம்மாச்சியின்

அருந்தவப் பேரனே!!

அதுவரை,

உன்

நினைவுகளை

அருந்திக் கொண்டிருப்போம்.

எல்லோருடனும்

இன்பமாய் வாழ

வாழ்த்துகிறோம்…

உனக்கும்

உன் கலைக்கும்

வணங்குகிறோம்!!!

நன்றியும், வணக்கமும்!!

-தமிழ் இலக்கிய மன்றம்

அந்தமான் தமிழர் சங்கம்

போர்ட் ப்ளைர்

7:08 மாலை

17.01.2011

Sunday, December 26, 2010

இலக்கிய மன்றத்தில் ரமண விஜயம்


இலக்கிய மன்றத்தில் ரமண விஜயம்

கடந்த சனிக்கிழமை (25-12-2010) அன்று வழக்கமான இலக்கியமன்ற வாராந்திரக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது திடீரென்று ஒரு பரிச்சயமானவர் வந்து சேர்ந்தார்.

அவர் வேறு யாரும் அல்ல...

நமது வானிலையினை துல்லியமாக முன்கூட்டியே அறிவிக்கும் திருமிகு ரமணன் தான் அந்தப் பிரபலம்.

ஓர் அரசுக் கல்விப் பயணமாக அந்தமான் வந்த அவரை இலக்கிய மன்றம் பற்றிச் சொல்லி மன்றத்திற்கு அழைத்து வந்தவர் ஆசிரியரும் மன்ற உறுப்பினருமான திருமிகு மனோகரன் அவர்கள். அவருக்கு மன்றத்தின் சிறப்பு நன்றிகள்.

ரமணன் அவர்கள் உறுப்பினர்களின் புயல் சுனாமி தொடர்பான கேள்விகளுக்கு சளைக்காது செந்தமிழில் பதில் தந்தது சுவையான் அனுபவம் தான்.

Friday, February 26, 2010

இலக்கியமன்றத்தில் இன்று (27-02-2010)

இலக்கியமன்றத்தில் இன்று (27-02-2010)

அந்தமான் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் வாரந்தோறும் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் குறிப்பிட்ட ஒரு தலைப்பு (கடந்த கூட்டத்தில் தர்ப்பட்ட) குறித்து உறுப்பினர்கள் பேசுவர்.

இன்றைய(27-02-2010) தலைப்பு " நட்பு".

உலகளாவிய தமிழ் நெஞ்சங்கள் தங்கள் கருத்துகளை இணையம் மூலமும் பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

Monday, February 15, 2010

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...

( என் பொறியியல் கல்லூரித் (சி ஐ டி 1984) தோழரும் தற்போது துபாயில் இருக்கும் அருமை நண்பர் லிவிங்க்ஸ்டன் அகஸ்டின் அவர்கள் அனுப்பிய கவிதை...

படியுங்கள்... உங்கள் இதயத்தையும் நெருடும்.)

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!

சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து
முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து
உனக்காக காத்திருக்கும்பொழுது
காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு..
ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!

சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல...
மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!

பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும்
சின்னப்பையனைபோல...
மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!

அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...
பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !

கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது
குளிரடிப்பதாய் கூறி –
ஒரு குழந்தையை போல அழுகிறாய் !

மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்...
கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "

இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்...
என் துபாய் கணவா!

கணவா... - எல்லாமே கனவா.......?
கணவனோடு இரண்டு மாதம்...
கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?

ٌ 12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ...
5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ....
2 வருடமொருமுறை கணவன் ...
நீளும் பட்டியலோடு
நீயும் இணைந்துகொண்டாய்!
இது வரமா ..? சாபமா..?

அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்...
முகம் பூசுவோர் உண்டோ ?
கண்களின் அழுகையை...
கண்ணாடி தடுக்குமா கணவா?

நான் தாகத்தில் நிற்கிறேன் –
நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் –
நீ விசாவை காட்டுகிறாய்

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
விட்டுகொடுத்து... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய் நான் விழித்து...
எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு...
தூங்குவதாய் உன் நடிப்பு...
வாரவிடுமுறையில் பிரியாணி...
காசில்லா நேரத்தில் பட்டினி...
இப்படி காமம் மட்டுமன்றி
எல்லா உணர்ச்சிகளையும்
நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்

இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம்
உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!
தவணைமுறையில் வாழ்வதற்கு
வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?

எப்பொழுதாவது வருவதற்கு
நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
விரைவுத்தபாலில் காசோலை வரும்
காதல் வருமா ?
பணத்தை தரும்... பாரத வங்கி !
பாசம் தருமா?

நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு
ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்
விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ
என் இதயத்தை?

பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ
தங்கம் தேடி துபாய் சென்றாயே?
பாலையில் நீ
வறண்டது என் வாழ்வு!

வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல்
ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த
புகைப்படம் அனுப்புகிறாய்!

உன் துபாய் தேடுதலில்...
தொலைந்து போனது –
என் வாழ்க்கையல்லவா..?

விழித்துவிடு கணவா! விழித்து விடு –
அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!

விசாரித்து விட்டு போகாதே கணவா
விசா ரத்து செய்துவிட்டு வா!

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்

Thursday, February 11, 2010

வரதட்சணை

வரதட்சணை
நாச்சா ரவியின் கன்னிக் கவிதை

உன்னை மொத்த்மாக
விலை கொடுத்து வாங்கியது
என்ன்மோ.. நான் தான்!!!

ஆனால்
நான் மட்டுமாய் செய்வதோ
சம்பளமிலா வேலைக்காரி !!!

அன்பாய் இருந்திட்டால் மட்டுமே
பிம்பத்தை பிரதிபலிக்கும்
சக்தி நான்...

உன் மனதில் என் நினைவு மட்டும்
இல்லையெனில் உன்னுயிர் எடுக்கும்
கத்தி நான்...

Tuesday, November 10, 2009

நன்றி மறவோம்

சமீபத்தில் நடந்த 9வது திருக்குறள் மாநாட்டை வெற்றியாக்கிய வி ஜி பி உலகத் தமிழ் சங்கம் மற்றும் இதர அறிஞர்களுக்கு நன்றி பாராட்டும் முகமாய் வாசித்தளித்த கவிதை.
(கவி ஆக்கம் : நகைச்சுவைக் கவிஞர் கார்மான்)

செவிக்குணவில்லாத
போழ்து-
வயிற்றுக்குக் கொடு.
சொன்னவர் வள்ளுவர்,
செய்பவர் சந்தோஷம்.

திங்கள் இரண்டாய்
தீவில் திருவிழா,
ஒன்பதாவது
திருக்குறள் மாநாடு.

இரண்டடி
முப்பால்
தந்தவர்க்கு
ஆறடியில்
அழகுச்சிலை
அளித்தவர்கள்-
விடியலும் ஜீவனும்
தந்த பிதாக்கள்!!!

தமிழகத்தில்
பருவ மழையால்
பெருவெள்ளம்.
விஜிபி உலகத்தமிழ்
சங்கத்தால்-
அந்தமானில்
தமிழ் வெள்ளம்.

அண்ணாச்சிகளின்
அன்புத்தமிழ்

குமரியின்
தமிழலை

அவ்வையின்
தமிழமுது

இராஜாதாசின்
இரத்தினத் தமிழ்

பேராசிரியர்களின்
மயக்கத்தமிழ்

உலகநாயகியின்
உன்மத்தத் தமிழ்

நெப்போலியனின்
நெத்தியடித் தமிழ்

இவையாவும்
பருகிப் பருகி
வாழ்வின் பயனை
எட்டி விட்டோம்.

வரும் நாட்களை
நீங்கள் வழங்கிய
தமிழோடு
வாழ்ந்து விடுவோம்.

தவணைமுறையின்
பிதாமகன்களே
இந்தத்தவணை
தமிழ்-
இப்போதைக்குப் போதும்.

அடுத்த தவணை
எப்போதைக்கு வரும்?

மூன்றாம் நாளாம்
இன்று...
செவிக்குணவில்லாததால்
வயிற்றுக்கு
அளிக்கிறீர்களோ?

இனி,
எதற்கு எதற்கெலாம்
நன்றி சொல்வோம்?

தமிழனும் தமிழும்
உள்ளவரை
உமை மறவோம்,
உமை மறவோம்!!!

நன்றியுடன்,
அந்தமான் தமிழர் சங்க இலக்கிய மன்ற அன்பர்கள்.
08-11-2009.

Monday, November 9, 2009

முனைவர் மு இளங்கோவிற்கு நன்றி

முனைவர் மு இளங்கோவிற்கு நன்றி

சமீபத்தில் வி ஜி பி உலகத் தமிழ்ச் சங்கமும் அந்தமான் தமிழர் சங்கமும் நடத்திய 9 வது திருக்குறள் மாநாட்டில் கலந்து கொள்ள புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி தமிழ் விரிவுரையாளர் முனைவர் மு இளங்கோவன் அவர்களும் வந்திருந்தார். மிக குறுகிய அவகாசத்தில் இரவு உணவு இடைவெளியின் போது ப்ளாக் உருவாக்குவது பற்றி விரிவாய் தெளிவாய் அனைவருக்கும் எளிதில் புரியும்படி எடுத்துரைத்தார். அவரின் உதவியினால் இன்று இந்த ப்ளாக் உங்களால் படிக்க முடிகிறது.

அந்தமான் தமிழ் இலக்கிய மன்றத்தின் அனைவரின் சார்பிலும் எங்களின் இதயம் கனிந்த நன்றியினை முனைவர் இளங்கோவன் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.